கோலியின் ஃபார்ம் குறித்து பேசிய மைக் ஹெசைன்!
கோலியின் ஃபார்ம் குறித்து பேசிய மைக் ஹெசைன்!
நடப்பாண்டுக்கான 15ஆவது சீசன் ஐபிஎல் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 60 சூப்பர் லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 10 போட்டிகளே உள்ளது. இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் போட்டி பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலிக்கு சோதனைக் காலமாக அமைந்துள்ளது. ரன் மிஷின், கிங் கோலி என்று அழைக்கப்பட்ட விராட் கோலி, கடந்த இரண்டு வருடங்களாக ஃபார்மில் இல்லாதநிலையில், இந்திய அணி மற்றும் ஐபிஎல் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை இழந்தார்.
எனினும், அதன்பிறகு பழைய ரன் மிஷின் விராட் கோலியை பார்க்கலாம் என்றால் பேட்டிங்கில் ரன் குவிக்க முடியாமல் திணறி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்து வருகிறார். குறிப்பாக எதிர் அணி வீரர்களும் விராட் கோலியின் பேட்டிங்கை கண்டு பயப்படும் நிலையில் இருந்துவந்த நிலையில், தற்போது அரைசதம் எடுப்பதற்கே கோலி திணறுவது, வியப்பாக உள்ளது. அதுவும் ஐபிஎல் கோப்பையை ஒருமுறை கூட வெல்லவில்லை என்றாலும், பெங்களூரு அணியில் ரன்கள் குவித்து சாதனை செய்யும் தன்னுடைய பொறுப்பிலிருந்து கோலி விலகியதே இல்லை.
ஐபிஎல் 2022: விராட் கோலியின் பேட்டிங் குறித்து பேசிய டூ பிளெசிஸ்!
ஆனால் தற்போது, இந்த சீசனில் விராட் கோலி 3 முறை டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்துள்ளார். அதிலும் கடந்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் 3-வது முறையாக டக் அவுட்டானதும் என்னசெய்வது என்றே தெரியாமல் விரக்தியில் சிரித்துக்கொண்டே சென்றார். இதேபோல்தான் நேற்று நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியில், முதலில் சிறப்பாக விளையாடியதால் பழைய கிங் கோலியை பார்க்கலாம் என நினைத்தநிலையில், ரபாடா வீசிய 4-வது ஓவரில் விராட் கோலி, 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஷார்ட் லெந்த் பந்தை விராட் கோலி கட் ஷாட் ஆட முயன்றார். ஆனால் பந்து ராகுல் சஹாரிடம் கேட்ச் சென்றது. இதற்கு களத்தில் இருந்த நடுவர் நாட் அவுட் கொடுத்தார். எனினும் அதனை எதிர்த்து பஞ்சாப் அணி டிஆர்எஸ் எடுத்தது. பந்து பேட்டில் படவில்லை என்ற காரணத்திற்காக நாட் அவுட் கொடுத்திருந்தனர். ஆனால் 3-வது நடுவர் ரிவ்யூவ் செய்து பார்த்தபோது, பந்து பேட்டில் எட்ஜானது தெரியவந்தது. இதனால் அவுட் என மாற்றி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் அவுட்டால் கடும் ஆத்திரமடைந்த விராட் கோலி, கைகளை தூக்கி வானத்தை பார்த்த அவர், கடவுளிடம் தனது அதிருப்தியை கூறினார். அதில் "இதற்கு மேல் நான் என்னதான் செய்ய வேண்டும் என நீ நினைக்கிறாய், என்னை சோதிக்கிறாயே" என மனம் கலங்கி கூறினார்.
விராட் கோலியின் பேட்டிங் குறித்து, தொடர்ந்து விமர்சனம் வைக்கப்பட்டு வரும் நிலையில், விராட் கோலிக்கு அந்த அணியின் இயக்குநர் மை ஹெசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர் போட்டிக்குப் பின் தெரிவித்ததாவது, "இந்தப் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி நல்ல நிலையில் இருந்தார். அவர் ரன்கள் எடுக்க வேண்டும் என்று ஆக்ரோஷமாக இருந்தார். அதற்காக அவர் நன்றாகத் தயாராகி இருந்தார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வலைப்பயிற்சியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.
இன்று விராட் கோலியின் நாளாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் மீண்டும் ஒருமுறை இப்படி ஆகிவிட்டது. இதனால் மற்றவர்களைப் போல் விராட் கோலியும் விரக்தியடைந்தார். ஆர்சிபியைப் பொறுத்தவரையில் அவர்தான் சிறந்த வீரர். விராட் கோலி ஒரு அபாரமான வீரர் என்பதில் சந்தேகமில்லை. அவர் விரும்பியளவு ரன்களை எடுக்கவில்லை. இன்று அவர் மிகவும் நல்ல தொடர்பில் இருந்தார். நான் சொன்னதுபோல், திரைக்குப் பின்னால் நிறைய வேலைகளைச் செய்கிறார். எனினும் துரதிர்ஷ்டவசமாக நடந்துவிட்டது.
ஏதோ ஒரு சிறப்பான விஷயத்தை பார்க்கப் போகிறோம் என்று நினைத்தேன். விரைவில் அவுட்டானாலும், சீக்கிரமாக நல்ல பார்மிற்கு திரும்புவார். அவர் விரக்தியில் இருந்தாலும், சிறப்பான பேட்டிங்கிற்கான திறமை அவரிடம் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம்” என்று தெரிவித்தார்.
இந்த சீசனில், 13 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 236 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கப்பட்ட 2008ஆம் ஆண்டு மற்றும் 2009ஆம் ஆண்டில் மோசமாக விளையாடிய விராட் கோலி, அதன்பிறகு அதிரடியாக விளையாடிநிலையில், தற்போது மீண்டும் மோசமான பார்மில் உள்ளார்.
எனினும், நேற்றைய போட்டியில் 20 ரன்கள் தான் எடுத்தாலும், ஐபிஎல் தொடரில் 6500 ரன்களை அவர் கடந்துள்ளார். இதனால் ஐபிஎல் தொடரில் 6,500 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Prediction Now
TAGS Mike Hesson Virat Kohli RCB vs PBKS IPL 2022
Comments
Post a Comment