தமிழக அரசு ஆன்மீக அரசு என்பதை மெய்பித்துவிட்டது! பட்டின பிரவேசம் விவகாரம்! தருமபுரம் ஆதீனம் பாராட்டு


தமிழக அரசு ஆன்மீக அரசு என்பதை மெய்பித்துவிட்டது! பட்டின பிரவேசம் விவகாரம்! தருமபுரம் ஆதீனம் பாராட்டு


 

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படு தொடர்பாக, தருமபுரம் ஆதீனம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தின் ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார்

தருமபுரம் ஆதினத்தைப் பல்லக்கில் தூக்கிச் செல்லும் பட்டினப் பிரவேசம் நடைபெறும். தருமபுரம் ஆதினத்தைப் பல்லக்கில் கோவிலுக்கு தூக்கிச் செல்வதுதான் இந்த பிரவேசத்தின் முறையாகும்.

இந்த பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு விசிக, திக உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து. தருமபுரம் ஆதினத்தைப் பல்லக்கில் தூக்கிச் செல்வதற்குத் தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பேசுபொருள் ஆனது. இதற்கு பல்வேறு தலைவர்களும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

 

இந்தச் சம்பவம் அரசியல் அரங்கிலும் எதிரொலித்துள்ளது. பாஜக, இந்து முன்னணி போன்ற அமைப்புகள் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை நிச்சயம் நடத்திக் காட்டுவோம் என்ற ரீதியில் பேசி வருகின்றனர். சமீபத்தில் இது தொடர்பாகப் பேசிய இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூட, தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சி தொடர்பாக அனைத்து மனங்களும் குளிரும் வகையில் முதல்வர் ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று கூறி இருந்தார்.

 

தடை நீக்கம்

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து ஆதீனங்களும் நேற்று முதல்வரையும் சந்தித்து இருந்தனர். பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில் அரசியலைக் கலக்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்ட ஆதீனங்கள், பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், சுமுகமான தீர்வு எட்டப்படும் என நம்புகிறோம் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து இன்றைய தினம் தருமபுரம் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டார்.

 

முதல்வருக்குப் பாராட்டு

இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசத்திற்கு அனுமதி அளித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்குப் பாராட்டு தெரிவித்தார். கருணாநிதி ஆட்சிக் காலத்திலும் பட்டின பிரவேசம் நடைபெற்றது என்று குறிப்பிட்ட தருமபுரம் ஆதீனம், தற்போது அவருடைய மகன் ஆட்சிக்காலத்தில் அது தடைப்படக்கூடாது என்று அஞ்சியதாகக் குறிப்பிட்டார், மேலும், பட்டின பிரவேச விவகாரத்தில் உடனடியாக தீர்வு கண்டதற்கு முதல்வருக்குப் பாராட்டு என்றும் தருமபுரம் ஆதீனம் தெரிவித்தார்.

 

ஆன்மீக அரசு

தொடர்ந்து பேசிய அவர், "தமிழக அரசு ஆன்மீக அரசு என்பதை மெய்ப்பித்து உள்ளது. தடங்கள் வந்தது நன்மைக்கு என்று கம்ப நாட்டார் சொல்வதுபோல் இந்த தடை பட்டின பிரவேச நிகழ்ச்சியை விளம்பரப்படுத்துவதாக அமைந்துவிட்டது. பட்டின பிரவேச நிகழ்ச்சிக்குத் தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள ஆன்மீக உள்ளங்கள், ஆதீன நண்பர்கள், குறிப்பாக ஆதீனகர்த்தர்களும் தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் வாழ்த்துகளையும் முதல்வரிடம் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

அமைச்சர் சேகர்பாபு இந்த விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் இதில் நல்லின உடன்பாடு ஏற்பட வேண்டும் என்று தீவிர முயற்சி எடுத்துத் தீர்வு கண்டுள்ளார். அவருக்கும் இந்து அறநிலையத் துறை ஆணையருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தருமபுரம் ஆதீனம் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog