வானகரத்தில் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூடுகிறது...!28187280
வானகரத்தில் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூடுகிறது...!
சென்னை,
ஆண்டுக்கு ஒருமுறைஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றதேர்தல் ஆணைய விதியின் அடிப்படையில், கடந்த23-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
ஆனால், பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோதே, "ஒற்றை தலைமை" கோஷம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்க தொடங்கியது. இதனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிர்ச்சி அடைந்தது.
தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியதால், பொதுக்குழுவை தடுத்து நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்ட அதே நேரத்தில், கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர்த்து வேறு சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோதும் கையெழுத்து போடவில்லை. கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதுடன், ஜூலை 11-ந் தேதி மீண்டும் அ.தி.மு.க. பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவிக்க எழுந்தபோது, அவர் மீது கூட்டத்தில் இருந்து தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டன. இதனால், ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த சூழ்நிலையில் வரும் ஜூலை 11-ந் தேதி மீண்டும் கூடும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், எப்படியும் ஒற்றை தலைமையை கொண்டுவந்து, கட்சியின் பொதுச்செயலாளராகிவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தி வருகிறார்.
அதே நேரத்தில், கூட்டத்தை எப்படியாவது தடுத்து விடவேண்டும் என்ற முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். இதனால், இரு தரப்பினரும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு முடிந்த அன்றே டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், தற்போது அங்கிருந்து திரும்பிய நிலையில், தென்மாவட்டங்களில் தனது பலத்தை நிரூபிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். சட்ட ரீதியாக அ.தி.மு.க. பொதுக்குழுவை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதனிடையே சென்னை ஐகோர்ட்டு உத்தரவை மீறியதாக கூறி அதிமுக பொதுக்குழு, செயற்குழு, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கமாக நடைபெறும் சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜூலை 11 ஆம் தேதி கூடும் பொதுக்குழுவிற்கான இடம் குறித்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்த நிலையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க.வில் அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பு தினந்தோறும் உருவாகி வருகிறது.
Comments
Post a Comment