எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் அதில் 'தாமரை மலரும்' பிரதமர் மோடி பதிலடி!!2073903108


எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் அதில் 'தாமரை மலரும்' பிரதமர் மோடி பதிலடி!!


டெல்லி: பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இருந்து நாங்கள் ஒருபோதும் ஓடி ஒளிந்தது இல்லை என்று பிரதமர் மோடி மாநிலங்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பதிலளித்து பேசுகையில் குறிப்பிட்டார். மேலும் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் அதில் தாமரை மலரும் என்றும் மோடி பேசினார்.

நாடாளுமன்றம் கடந்த மாதம் 31-ந் தேதி கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.

திரவுபதி முர்மு குடியரசுத்தலைவராக பொறுப்பேற்ற பிறகு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றியது இதுவே முதல் முறை ஆகும். நாட்டின் முன்னேற்றங்கள் குறித்தும், எதிர்கால கனவு உள்ளிட்டவை குடியரசுத்தலைவர் உரையில் முக்கிய அம்சமாக இருந்தது.

நன்றி தெரிவிக்கும் தீர்மானம்

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் 2 நாட்களில் சுமார் 12 மணி நேர விவாதம் நடந்தது. இந்த விவாதத்திற்கு நேற்று பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்து பேசிய பிரதமர் மோடி காங்கிரசையும் கடுமையாக விமர்சித்தார். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைச் செய்வதற்கு பதில் காங்கிரஸ் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடந்த 9 ஆண்டுகளை வீணாக்கிவிட்டது என்றும் சாடினார்.

எதிர்க்கட்சிகள் கடும் அமளி

இந்த நிலையில், மாநிலங்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி இன்று பதில் உரையாற்றினார். பிரதமர் மோடி தனது உரையை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் உறுப்பினர்களை சமாதானப்படுத்த முயன்றார். எனினும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியை கைவிட மறுத்தனர். இதையடுத்து உறுப்பினர்கள் அமளிக்கு இடையே பிரதமர் மோடி தனது உரையை தொடங்கி பேசி வருகிறார்.

பிரதமர் மோடி பேசியதாவது:- 

அப்போது நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்களின் நடவடிக்கை அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் சிறிய சிறிய நாடுகள் கூட முன்னேறி வந்தது. பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இருந்து நாங்கள் ஒருபோதும் ஓடி ஒளிந்தது இல்லை. எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் அதில் தாமரை மலரும். எங்களை பொறுத்தவரை நாட்டு மக்கள்தான் முக்கியம். மக்களின் ஆதரவை பெற கடினமாக உழைக்கிறோம்.

மக்களின் நம்பிக்கைதான் மேலானது

கொள்கையும் நோக்கமும் வளர்ச்சிக்கு அவசியமானவை. நாட்டு மக்களின் நம்பிக்கைதான் எல்லாவற்றிற்கும் மேலானது. அவற்றை நாங்கள் வென்றுள்ளோம். தொழில்நுட்பத்தின் சக்தியுடன் பணியாற்றும் கலாசாரத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். நாட்டின் தொலைதூரங்களுக்கும் வளர்ச்சியை கொண்டு செல்வதில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம். காங்கிரஸ் கட்சியின் கணக்கு மூடப்பட்டுவிட்டது. கர்நாடக மாநிலத்தில் மட்டும் 1.70 கோடி ஜன் தன் வங்கி கணக்குக்ள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு நலத்திட்டங்கள் ஜன் தன் வங்கிக் கணக்குகள் மூலம் மக்களுக்கு நேரடியாக சென்று சேருகிறது.

32 கோடியாக உயர்ந்துள்ளது

ஜன் தன் வங்கிக் கணக்குகள் மூலம் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது. இதில், விரக்தியடைந்த பலர் முழக்கங்களை எழுப்புகிறார்கள். முந்தைய ஆட்சி காலத்தில் 3 கோடி மக்களுக்கு மட்டுமே குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு இருந்தன. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 11 கோடி இல்லங்களுக்கு குடி நீர் இணைப்புகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல் பாஜக ஆட்சிக்கு வந்த பின் சமையல் எரிவாயு இணைப்புகள் 14 கோடியில் இருந்து 32 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments

Popular posts from this blog