குரூப் 4 தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி உடனடியாக வெளியிட வேண்டும்!1027979223


குரூப் 4 தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி உடனடியாக வெளியிட வேண்டும்!


சென்னை: குரூப் 4 தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி உடனடியாக வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ச.ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசுத் துறைகளில் உள்ள நான்காம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் நடத்தி முடிக்கப்பட்டு 7 மாதங்கள் ஆகவுள்ள நிலையில், அத்தேர்வுகளுக்கான முடிவுகள் இன்றுவரை வெளியிடப்படவில்லை. பிப்ரவரி மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு வராததும், அறிகுறிகள் கூட தென்படாததும் தேர்வு எழுதிய மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு 7301 பேரை தேர்வு செய்வதற்கான நான்காம் தொகுதி தேர்வு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த ஜூலை 24-ஆம் தேதி நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருந்த அறிவிக்கையின்படி, ஜூலை மாதம் நடத்தப்பட்ட நான்காம் தொகுதி தேர்வுக்கான முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அதே மாதத்தில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டு, நவம்பர் மாதத்தில் அவை சரிபார்க்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவை எதுவுமே நடக்கவில்லை.

அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட வேண்டிய முடிவுகள் நவம்பர் மாதத்தில் வெளியாகும்; டிசம்பர் மாதத்தில் வெளியாகும்; ஜனவரி மாதத்தில் வெளியாகும் என்று செய்திகள் தான் வெளியாகினவே தவிர, முடிவுகள் வெளியாகவில்லை. ஜனவரி மாத இறுதியில் தான், நியமனம் செய்யப்பட வேண்டிய நான்காம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கை 9801ஆக உயர்த்தப்படுவதாகவும், பிப்ரவரியில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. ஆனால், அதற்கான நகர்வுகள் எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. எப்போது முடிவுகள் வெளியாகும் என்பது யாருக்கும் தெரியவில்லை.

 

முதல்நிலைத் தேர்வுகள், முதன்மைத் தேர்வுகள், நேர்காணல்கள் என 3 முக்கியக் கட்டங்களைக் கொண்ட குடிமைப் பணிகளுக்கான அனைத்து நடைமுறைகளும் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட ஓராண்டில் நிறைவடைகின்றன. ஆனால், ஒரே தேர்வை கொண்ட நான்காம் தொகுதி பணிகளுக்கு தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு ஓராண்டு நிறைவடையவிருக்கும் நிலையில், இன்னும் போட்டித் தேர்வு முடிவுகள் கூட வெளியிடப்படாதது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் படுதோல்வி ஆகும்.

 

2014-ஆம் ஆண்டுக்கு பிந்தைய பத்தாண்டுகளில் இதுவரை 6 முறை நான்காம் தொகுதி தேர்வுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியிருக்கிறது. அவற்றில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வு தவிர மீதமுள்ள 5 தேர்வுகளில் 3 தேர்வுகளின் முடிவுகள் 5 மாதங்களுக்குள்ளாகவும், 2 தேர்வுகளின் முடிவுகள் 3 மாதங்களுக்குள்ளாகவும் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆனால், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் தான் 7 மாதங்களாகியும் வெளியிடப்படவில்லை. மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான விஷயத்தில் தேர்வாணையம் இவ்வளவு அலட்சியமாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வைத்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 31.01.2023 நிலவரப்படி 67 லட்சத்து 58,698 ஆகும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யாதவர்களையும் கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை ஒன்றரை கோடியைத் தாண்டும். அதனால் தான் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியை அடிப்படையாகக் கொண்ட நான்காம் தொகுதி பணிகளுக்கான தேர்வுகளை எழுத 22 லட்சத்திற்கும் கூடுதலானவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 18.50 லட்சம் பேர் எழுதினார்கள். இவ்வளவு இளைஞர்களின் எதிர்காலம் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கைகளில் இருக்கும் நிலையில், அதற்கேற்ற பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்ள அரசுப் பணியாளர் தேர்வாணையம் தவறிவிட்டது.

 

அரசுப்பணி என்பது தான் தமிழ்நாட்டில் இன்று லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக உள்ளது. ஒரு போட்டித் தேர்வை எழுதிய மாணவர்கள், அதன் முடிவை அறிந்தால் தான் அடுத்தப் போட்டித் தேர்வுக்கு முழு மனதுடன் தயாராக முடியும். இத்தகைய சூழலில் ஒரு தேர்வை அறிவித்து, நடத்தி, முடிவுகளை அறிவிப்பதற்கு ஓராண்டை பணியாளர் தேர்வாணையம் எடுத்துக் கொள்வது மாணவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். அவர்களின் உணர்வுகளை தேர்வாணையம் மதிக்க வேண்டும்.

 

நான்காம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் ஓர் அடுக்கு கொண்ட போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடுவதில் தொடங்கி பணி நியமன ஆணை வழங்குவது வரையிலான அனைத்து நடைமுறைகளும் 5 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும். ஈரடுக்கு தேர்வு கொண்ட முதல் மற்றும் இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை வெளியிடுவதில் தொடங்கி நியமன ஆணை வழங்குவது வரையிலான அனைத்து நடைமுறைகளும் 9 மாதங்களில் முடிக்கப்படுவதை அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

25 Healthy Meal Prep Ideas To Simplify Your Life